தமிழர் குறுந்திரைப்பட விழா ஒரு பார்வை!
- அருண் -

“எமக்கான திரைப்பட மொழியை உருவாக்கிடுவோம்” என்ற கோஷத்தை முன்னிறுத்தி மூன்றாவது தமிழ்(?) குறுந்திரைப்பட விழா நடந்தேறிருக்கிறது. இது அமைப்புரீதியாகவோ, அரச உதவிப்பணம் பெற்றுக்கொண்டோ நடத்தி முடிக்கப்பட்டதேயல்ல. ஒருசிலரின் சிரமதானங்களும் பொருள்தானங்களுமே நல் நோக்காய் பரிணமித்தது. ஒரு முழுநீளத் திரைப்படத்தை எடுத்து முடிக்குமளவில் சிரமங்கள், நடைமுறைச் சிக்கல்கள் பல இருந்தும், திரைப்படக் கனவுகளுடன் இருக்கும் பல திறைமைசாலிகளை ஊக்குவிக்க வேண்டும், இருக்கும் வசதிகளைக்கொண்டு தம் திரைப்பட தாகத்தை தீர்க்கக் களம் அளிக்க வேண்டும், சொற்ப செலவில் நற் கருத்துகளை திரைப்படம் வாயிலாக எமது சமூகத்துக்குச் சொல்லமுடியும்....சொல்லுங்களேன் என்பதாக எம்மவர்களின் திரைப்பட வளர்ச்சியில் நல் அக்கறை கொண்டு,இந்நல் நோக்கத்தை நடைமுறைப் படுத்துவதற்காக இக் குறுந்திரைப்பட விழாவை ஒழுங்கு செய்து திறம்பட நடத்தியிருந்த இக்குழாமைப் பாராட்டியே தீரவேண்டும்.

சர்வதேச ரீதியில் தமிழர்களிடமிருந்து பெறப்பட்டிருந்த குறுந் திரைப்படங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இருபத்தி மூன்று படங்களில் ஐந்து இந்தியாவிலிருந்தும் இரண்டு இலங்கையில் (மட்டக்களப்பில்)இருந்தும் ஒன்று நோர்வேயிலிருந்தும் மீதிப் பதின் ஐந்தும் கனடாவிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. இவற்றில் இரண்டு விபரணச் சித்திரங்கள். ஒன்று எழுத்தாளர் அசோகமித்திரனுடனான செவ்வி. இது இந்தியாவிலிருந்து வந்திருந்தது. மற்றது இந்தியாவில் தஞ்சம்புகுந்த ஈழ அகதிகளின் அவலம் பற்றி கனடா/அமெரிக்காவிலிருந்து கொடுக்கப்பட்ட ஆங்கில மூலம். இதன் தமிழ்பெயர்ப்பு முன்னொரு காலத்தில் “இளைய நிலா(1996)” வீடியோ மஞ்சரியில் வந்திருந்தது. நாங்கள் மறந்திருப்போமென தூசிதட்டி கொடுத்திருக்கிறார்களோ?

இவ்விழாவினை ஒழுங்கு செய்தவர்களின் முயற்சி திருவினையாக்கியதின் வெளிப்பாட்டை இம் மூன்றாம் ஆண்டிலேயே உறுதிசெய்யும் வகையில், காண்பிக்கப்பட்ட குறும் படங்களின் தரம் முன்னேற்றங் கண்டிருந்ததுடன் கனடாவிலிருந்து கொடுக்கப்பட்டிருந்த படங்களின் எண்ணிக்கையும் அதிகமாயிருந்தது. விழா அமைப்பாளர் குழு , வெவ்வேறு தகமைகளுக்காக படங்களிற்கு விருதுகள் வழங்கத்- தீர்மானித்திருந்தது பாராட்டுக்குரியது. விருதுத்தெரிவுகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த நீதிபதிகள் அறுவரின் பெயர்களும் அவர்கள் தகமைகளும் பார்வையாளர்களுக்கும் பங்குபற்றியிருந்தபடைப்பாளிகளுக்கும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது அதைவிடப் பாராட்டுக்குரியது.

விபரணப் படங்களில் அசோகமித்திரன் தொடர்பானது ஒரு சுயசரிதம்பேல் அமைந்திருந்ததும் ஈழ அகதிகள் அவலம் 1991 வருடத்தினைக் குறிப்பிட்டும் எடுக்கப் பட்டிருந்ததாலுமோ என்னவோ இவற்றிலேதும் பரிசிலுக்கு பரிசீலிக்கப்படவே இல்லைப்போலும். விபரணத்துக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த விருது வீணாகிப் போனது. மீதிப் படங்களைப் பார்க்கையில் எல்லோரும் ஏதோ வகையில் தம்மாலியன்றதைச் செய்ய முயன்றிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. பொதுவாகப் பார்க்கையில் மட்டக்கிளப்பு ரூபேஷ் தந்திருந்த நாற்பதே செக்கன் படமான “இது விளம்பரமல்ல” என்பதும் ரஞ்சித் ஜோசேப்பின் “It's All About" என்ற நான்கு நிமிடப் படமும் தவிர்ந்த ஏனையன ஆண்களை, பெண்களை சமூகத்தை, வாழ்விடத்தை, உறவுகளை, உணர்வுகளை குற்றஞ்சாட்டுவதாக அமைந்திருந்தன. குறும்படம் பேயருக்கேற்ப எவ்வளவு குறுகிய நேரத்தில் ஒரு கருவை, கருத்தை அல்லது கதையை சொல்ல முடியும் என்பதில் தன் வீரியத்தை பகர்கிறது. இதனால் படத்தெகுப்பு திரைக்கதை என்பன மிக நேர்த்தியாக இறுக்கமானதாக இருப்பது அவசியமாகிறது. இந்தவகையில் பெரும்பான்மையான படங்களில் வீரியத் தளர்வினைத்தான் காணமுடிகிறது. இருந்தும் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த “ஈசல்” என்ற படம் மிகக் கச்சிதமாக அமையப் பெற்றிருந்ததையும் காணக்கூடியதாகவிருந்தது. மாறாக “இது விளம்பரமல்ல” என்றபடம் மிகமிகக் குறுகிவிட்டதால் தொகுப்பில் வேகமிருந்த அளவில் காட்சிச் சிக்கனம் அதீதமாகி புரிந்துகொள்ளப்படவேண்டும் என்ற அடிப்படை விதியினில் பிறழ்ந்து வீரியமிழந்துவிட்டது.

குற்றங்கள் சொன்னால் பிடிப்பதில்லை. இது நக்கீரனை நெற்றிக்கண்திறந்து எரித்திட்ட சிவனார் காலத்திலிருந்து இருக்கின்றதென்பது இலக்கியச் சான்று. இருந்தும் திரைப்படத்தின் வளர்ச்சியின் ஆரோக்கியம் கருதியும் தனது முதுகு தன் கண்ணுக்குத் தெரிவதில்லை என்ற உண்மையை நம்பியும் சில கருத்துகளை முன்வைக்கின்றேன் ஏற்றால் ஏருங்கள் முடியாவிடில் மழை பெய்தால் கரையமாட்டீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஸ்ரீபன்(நேர்வே) படம் “பயனம்” கருத்து இருந்த அளவில் திரைக்கதையில் இறுக்கமில்லை. நடிகர்கள் பாத்திரத்தை உணர்ந்து ஈடுபாட்டுடன் நடித்திருக்கவில்லை. குறிப்பாக கணவன்-மனைவி ஏதோ பேட்டி கொடுப்பது போல் அந்நியமாக உரையாடியிருக்கிறார்கள். இதே போல் S.T.செந்தில்நாதனின் “ஊருக்குப் பயனம்” திரைக்கதை சரியாக அமையவில்லை. பாத்திரம் உணர்ந்து எவரும் நடித்திருக்கவில்லை. ஏதோ பாடமாக்கி ஒப்புவிப்பதுபோல வயோதிபத் தந்தை-தாயாய் நடித்த K.S.B.யும் திருமதி. பத்மாவதி சீவரட்னமும் வசனம் ஒப்பித்திருந்தனர்.

மெளனப்படங்களாக நான்கு வந்திருந்தது. இதில் “Dream Inside” என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதன் பின்னனியில் ஒலித்த மேற்கத்தைய இசை எனக்கு சுத்த சூனியம் என்பதாலோ என்னவோ என்னால் அதைப் புரியமுடியவில்லை. ஆனால் அதன் ஒளிப்பதிவும் தொகுப்பும் பாராட்டும்படி இருந்தது. இது ஜேசனின் (கனேடியப்) படம். அடுத்து,“மனுஷி”. இது மனைவி சமயல்காரியாகவும் பாலியல் பதுமையாகவுமே ஆண்களால் பார்க்கப்படுகிறாள் என்பதாக காலகாலமாகக் கேட்டுவந்திருந்த ஆண்கள் மீதான பெண்ணிய வாதிகளின் பழங்குற்றச்சாட்டை சுவாரசியமாகச் சொன்னபடம். (இவ்விடத்தில் என் நீண்ட காலக் கேள்வி என்னவென்றால்--பாலியல்த் தேவை ஆண்களுக்கு மட்டுமே தேவையானதா; பாலியல் உணர்ச்சியோ தேவையோ பெண்களுக்கு இல்லையென இப்பெண்ணிலை வாதிகளால் நிரூபிக்க முடியுமா?) பெண்ணிலைவாதிகளின் இக்குற்றச்சாட்டு; இப்போதெல்லாம் தலைகீழாகி அபாண்ட குற்றச்சாட்டாய் ஆகிவரும் இக்காலகட்டத்தில் இதையே காட்சிப்படுத்துவதில்தான் என்ன முனைப்பிருக்கிறதோ? மேலும் சொல்ல வந்ததை சரியாகச் சொன்னார்களா என்பதை நோக்குகையில்....மனைவி வேலையற்றவளாயும் மூன்று வேலைசெய்யும் கணவனுக்கு அன்றே ஓரெயொரு ஓய்வுநாளாயும் இருந்திந்தால்.....? காட்டிய காட்சிகள் சப்பென்றிருந்திருக்காதா? இக் கேள்விகளை மறுக்கும்வகையில் திரைக்கதையை வலுவேற்றியிருக்கவேண்டும். இருந்தும் இருவரும் திறம்பட நடித்திருக்கிறார்கள். படத்தொகுப்பு இறுக்கமாக இருந்திகருக்கலாம். படப்பிடிப்புக் கோணங்கள் சரியாக இருந்திருந்தும் இறைச்சி வெட்டிக்கொண்டிருக்கும் நாயகியின் External Close-up Shot ஒரு உறுத்தலை ஏற்படுத்துகின்றது. Cameraவை முகத்துக்கு மிக மிக நெருக்கமாக வைத்து எடுத்திருந்ததால் இந்த விகாரம் நேர்ந்திருக்கின்றது. (ரூபனின் படம்)

சுதா சண் “Untitled”ஐ முழுக்க வேற்றினத்தவர்களை வைத்து எடுத்திருந்தார். நேர்த்தியாக எடுக்கப்பட்டு நுட்பமாய் தொகுக்கப்பட்டிருந்தது. புதிய பார்வையைச் சொல்லியிருக்கிறது. இப்படம் காண்பிக்கப்படமுன் அங்கு வந்திருந்த சிறார்கள் வெளியேற்றப்பட்டார்கள். அதில் காட்டப்பட்ட பாலியல் காட்சியே அதற்கான காரணம். இவ்விடத்தில் ஒரு கேள்வி-அண்மையில் திரைக்கு வந்திருந்த “மெதுவாக உன்னைத் தொட்டு” திரைப்படத்தில் அதுவும் ஒரு வியாபார ரீதியான படத்தில் நாங்கள் சர்வ சாதாரணமாக ஒலிம்பிக் போட்டியிலும் ஏன் கடல்/வாவிக் கரையிலும் நீச்சலுடையில் காணும் பெண்போல, குளியல் அறையில் நாயகி நீச்சலுடையில் காட்டப்பட்டதற்காக பத்திரிகைகளில் எழுதிக்கிழித்தவர்கள் பிரசண்யமாகியிருக்க அதுவும் இதை வாசித்தும் பிறர் சொல்லக் கேட்டும் படத்துக்கே போகாது தவிர்த்து இரவல் இரசனையில் ஆபாசப் படம் இதுவென படமே பாக்காது விமர்சனம் எழுதியவர் குறும்படவிழா அமைப்பாளரில் ஒருவராயிருக்க அப்பட்டமான பாலியல் உறவு காட்டப்பட்டதென்றால் இவரின் எழுத்தின் யோக்கிதையை என்னென்று சொல்ல? அரைகுறை ஆடையையை விரசம் என ஆதங்கப்பட்டிருந்த ஆசிரியர் ஒருவரும் (அவரும் மெ.உ.தொட்டு பார்க்காதவர்) அங்கிருந்தார். படம்பார்த்து ஆபாசமென பத்திரிகையில் கிழித்திருந்தவரும் குறுந்திரைப்படவிழாவின் பார்வையாளராயும், பேச்சாளராயும் பங்களிப்பாளராயும் இருந்திருக்கிறார்.... இவர்களின் மெளனம் பச்சோந்தித்தனமானதா? மெ.உ.தொட்டு மீதான இவர்களின் பாய்ச்சல்?.......வயிற்றெரிச்சலில் வாந்தியெடுத்தது தானா?

சென்ற ஆண்டு கன்னிப்படைப்பாக தரமான படமொன்றைத் தந்திருந்த முல்லையூர் பாஸ்கரன் இடமிருந்து இன்னொரு தரமானது வருமென்று எதிர்பார்த்தவர்கட்கு ஏமாற்றமே மிஞ்சியது. சொல்லவந்த கருத்தைச்சொல்ல வலுவான திரைக்கதை அமைக்கப்படவில்லை. K.S.B தன் பங்கைத் திறம்படச் செய்திருந்தார். படப்பிடிப்பும் தொகுப்பும் தளர்ந்திருந்தது.---“Abuse”.

K.S. பாலச்சந்திரன் நெறியாள்கையில் “வாழ்வு எனும் வட்டம்” படப்பிடிப்பும் தொகுப்பும் கச்சிதமாக அமையப் பெற்றிருந்தது. எல்லாப் பாத்திரங்களும் தம்பங்கைச் சரியாக உள்வாங்கி சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்கள். இவரின் வழமையான ஈழ நாடகபாணி வசன உச்சரிப்பிலிருந்து மாறி எதார்த்தவழக்கிற்கு நகர்ந்திருந்தது முன்னேற்றத்தைக் காட்டுகின்றது. இருந்தும் தகப்பன், தாய், மூத்தமகன் இவர்களிடையேயான வயதுவேறுபாடுக்கேற்ற தோற்றம் சரியாக அமையவில்லை. கதை சொன்ன பாணி நன்றாக இருந்தும் எதைச் சொல்ல வந்தார் என்பது தெரியாமலேபோனது திரைக்கதையின் பெரிய ஓட்டை. ஆனால் இதற்குத்தான் சிறந்த திரைக் கதைக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது(?). “It's All About"-ஒரு தீர்வைச் சொல்லிய படம். கால் ஊனமுற்ற இருவர் கைத்தடி உதவியுடன் எதிர்த் திசையிலிருந்து வந்து சந்திக்கின்றார்கள். இருவரும் கைத்தடியை எறிந்துவிட்டு ஒருவரோடொருவர் தோளில் கைபோட்டு சேர்ந்துசெல்கிறார்கள். சொல்லப்பட்டது நல்ல கருத்தே; என்றாலும் படம் அதை அரைகுறையாய்த்தான் விளங்கவைக்கிறது. இதையே நெறியாளர் வெவ்வேறு திசைகளிலிருந்து வரும் அவர்களை ஒரு இடத்தில் சந்திக்கவைத்து சேர்ந்து முன் நோக்கிய திசையில் செல்வதாகக் காட்டியிருந்தால் கருத்து பூரணமடைந்திருக்கும். சிறந்த நெறிப்படுத்தலாயும் அமைந்திருக்கும். இருந்தும் இப்படத்துக்கே சிறந்த நெறியாள்கைக்கான விருது வழங்கப்பட்டிருந்தது.

“உஸ்...” படம் ஒரு பெண்குழந்தைக்கு தாயின் பாதுகாப்பும் கண்காணிப்பும் மிக அவசியம் என்ற செய்தியைச் சொல்லிய படம். குழந்தை நட்சத்திரம் வெகு சிறப்பாக நடித்திருந்தது. தகப்பனாய் நடித்தவருற்கு உச்சக்கட்டக் காட்சியில் உணர்ச்சியைக் காட்டத் தெரியாமல் போய்விட்டதும் இதனொரு குறை. திரைக்கதை சீராக இருந்தது. வசனம் பழைய “கண்ணாடி வார்ப்புகளை” ஞாபகப்படுத்தும் வகையில் அதே பாணியான நின்று-நிதானித்து பேசும் பாங்கு நாடகத்தன்மையை உண்டாக்கியது. காட்சிகளை இன்னும் சிக்கனப்படுத்தி படத்தொகுப்பை இறுக்கமாக்கியிருந்தால், திரைக்கதை, படக்கட்டுக்கோப்பு என்பன பலமாயிருந்திருக்கும். உஸ்”; திரைக்கதை எதைச் சொல்கிறது? தாய் வேலைக்குப் போவதால் மகள் பாலியல் வன்முறைக்குள்ளாகுவாள் என்றா? இல்லை, வேலைக்குச்செல்லுந் தாய்மார் நிலக்கீழ் அறையில் வாலிபனைக் குடிவைக்கக்கூடாதென்றா? கணவன் சொல்மீறி மனைவி வேலைக்குச் சென்றால் பிள்ளைக்குத் தொல்லை வருமென்றா? ......எதை ஆணித்தரமாகச் சொல்கின்றது என்பதை புரியவைக்காதது திரைக்கதையின் பலவீனமே. படப்பிடிப்பு தெளிவாக இருந்தாலும் Camera அசைவு, படம்பிடித்த கோணம் என்பன உறுத்தலை ஏற்படுத்தியது. குறிப்பாக ஓடும் காரில் கதைத்துச்சென்றதாகக் காட்டப்பட்ட காட்சி உண்மையில் ஓடுங் காரில் படம்பிடிக்கப் பட்டிருக்கவில்லை. நிற்குங்காரில் இதனை எடுத்துவிட்டு Chroma -Key தொழில்நுட்ப உத்தியில் ஓடும் பின்புலக்காட்சி சேர்க்கப்பட்டிருந்தது. இத்தெழில்த்தந்திரம் நடிகர்களின் உருவம் ஓரம் ஏற்படுத்திய விளிம்புப் பிசிரடிப்பு இதனைக் காட்டிக்கொடுத்திருந்தது.-- இருந்தும் சிறந்த படப்பிடிப்புக்கான விருது இதற்கே வழங்கப்பட்டிருந்தது. (சுமதி ரூபனின் படம்)

“துரோகம்” என்பது ஏற்கனவே இங்கொரு குறும்படவிழாவில் விருதுபெற்றிருந்தது. இளைஞர் வன்முறையொன்று தொடரப்போவதாக ஊகித்து அதைத் தடுக்குமுகமாக தன் நண்பர்களை காட்டிக் கொடுப்பதன்மூலம் தடுப்பதே கதை. எதிர்பாராத முடிவு! இதுவே இக்கதையின் பலம் அதைவிட ஏதும் சமூகப் பார்வையோ அறிவுரையோ இக்கதையிலில்லை. இயல்பான பேச்சு வழக்கில் உரையாடியிருந்தது இதன் சிறப்பு. நண்பன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டபின் காட்டப்பட்ட காட்சிகளை படம்பிடிப்பதற்காக தெரிவுசெய்யப்பட்ட இடம் கதைக்கு வலுவூட்ட ஏற்றதாயிருக்கவில்லை. முழுதும் இரவுநேரக் காட்சிகள். Camera அசைவு சீரற்றிருந்தது. அதிமான துண்டுகள் தேவையில்லாதது. கார் போய்க்கொண்டிருக்கையில் நடைபெறும் உரையாடல் நீண்டுவிட்டது. தேவையற்றது நீக்கப்பட்டிருக்கலாம். நண்பர்களின் மனதுகளை மாற்றமுற்படும் நாயகன் திரும்பத்திரும்ப பேசிய வசனங்களையே பேசிக்கொன்டிருந்தது கதையில் தொய்வைத்தந்தது. படத்தொகுப்பை இன்னும் இறுக்கமாய் அமைத்திருக்கலாம். கொலைசெய்யப் புறப்பட்ட நண்பர்களைப் பொலீசுக்குக் காட்டிக்கொடுத்ததிலும், நண்பனை சுட்டுக்கொன்றவர்கள்பற்றி அறிந்துகொண்ட தகவல்களை பொலீசுக்கு சமர்ப்பித்திருக்கலாமே? நண்பர்களுக்கு துரோகம் செய்ததாயும் முடிந்திருக்காது சண்டை மூழ்வதை தடுத்ததாயும் முடிந்திருக்கும்..... இது ஏன் செய்யப்படவில்லையென திரைக்கதை கூறவில்லை.- இருந்தும் இதற்கே சிறந்த படத்தொகுப்புக்கான விருது வழங்கப்பட்டிருந்தது. இந்தியாவிலிருந்து வந்திருந்த “கனவு” மிக உழுத்துப்போன பழையகதை. இது எத்தனையோ கதைகளிலும் திரைப்படங்களிலும் சம்பவமாய் வந்திருக்கிறது. இதைச் சொல்லிய பாணியும் பழையது. குறும் படத்துக்கே தேவையில்லாத நீண்ட காட்சிகள். ஆனால் ஒளிப்பதிவு மட்டும் பராட்டும்படி அமைந்திருந்தது.---இதுவே சிறந்த படமாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது. (?)

“அடுத்து "Winning Star" தமிழ் நாட்டிலிருந்து வந்திருந்தது. ஆட்களையே காட்டாது வெறும் பின்னனிக் குரல்களின் பலத்தில் மாயாவிப்படங்களில் வருவதுபோல பொருட்களின் அசைவை படம்பிடித்து கதையை நகர்த்தியிருந்தார் ஜனா. இதொரு புதுயுக்தி என எடுத்துக்கொள்ளினும் உடலுறுப்பு தானத்தை வலியுறுத்துவதற்காக பல சம்பவங்களையும் பல காட்சிகளையும் திணித்துக்கொண்டதால் திரைக்கதை நீண்டு வியாபித்து தொய்வை ஏற்படுத்தி விட்டது. இன்னொரு இந்தியப்படமான "My Life" கலவரத்தால் ஒரு அப்பாவித் திறமைசாலி அநியாயமாக பாதிக்கப்படுகிறாள் என்பதைக் காட்டியிருந்தது. இதுவும் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டதுபோல் சம்பவங்களின் அநாவசியத் திணிப்பு இழுத்தடித்த திரைக்கதை என்பதாக ஆக்கிவிட்டது. ( இது ஸ்ரீ ரங்கனது படம்) இலங்கையிலிருந்து வந்திருந்தது ரூபேஷின் “சைக்கிள்”. சைக்கிள் வாங்க ஆசைப்பட்ட ஒருவனுக்கு சைக்கிள் கிடைக்கவிருந்த வேளையில் அதை ஓடமுடியாது கண்ணி வெடியில் கால்களைத் துண்டாடிய விதியை நொந்துகொண்ட கதையிது. இதில் பங்குபற்றிய ஒவ்வொரு பாத்திரமும், ஒருவர் பேச்சுத்தமிழ் மற்றவர் இலக்கியத்தமிழ் இன்னொருவர் நாடகத்தமிழ் என வெவ்வேறு வகயில் தமிழ் பேசுகின்றனர். மேலும் ஒரேகாட்சி வெவ்வேறு இடங்களில் திரும்பத் திரும்ப தேவையற்று பாவிக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பும் தொகுப்பும் நன்கமையவில்லை.

கனேடிய படமான K.B..நாததின்; “காதல் ஏஞ்சலே” முன்பே பலஇடங்களில் காட்டப்பட்ட படம் இதில் வரும் பாடல்க்காட்சி தேவையில்லாதது. படப்பிடிப்பு படத்தொகுப்பு நல்லாகவே இருந்தாலும் நடிப்பு சற்று மிகையானதாய்த் தெரிகிறது. முதல் காட்சி ஏதோ இடையிலிருந்து தொடங்குவது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. திரைக்கதையில் ஏதோ பிசகு.

மகாலிங்கம் சுதனின் “அடிமை” படத்தில் எழுத்தோட்டம் நேர்த்தியாக பிரமிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது பாராட்டத்தக்கது. படப்பிடிப்பு மிக அருமை. படத்தெகுப்பும் கச்சிதமாக அமையப்பெற்றிருந்தது. செல்லப்பட்ட கருத்து நல்லதெனினும் தாயிடமே களவெடுத்த குற்ற உணர்வினால் திருந்துவதென்பது மிகமிகப் பழைய திருப்பம். அதனால் இது எடுபடவில்லை.

“சப்பாத்து” சுமதி ரூபனின் தயாரிப்பு. இக்கதை எங்கேயோ எப்போதோ வாசித்த கதை என்ற பிரமையை ஏற்படுத்திடினும் எங்கே எப்போதென்பது சட்டென்று ஞாபகமாகவில்லை. தகப்பனுக்கு வேலையில்லாதபோது தானே உழைத்து சப்பாத்து வாங்கும் மிக அவதானமான மகன் கோவிலுக்கு அந்தச் சப்பாத்துடன் அதுவும் தனியவே போகவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டதென்பது விளங்கப்படுத்தப் படவில்லை. சரி இந்தக்கதை எதைச் சொல்கின்றது? கோவிலில் சப்பாத்து திருட்டுப்போகும் என்பதாகச் சொல்கிறதா? சிறுகச் சேர்த்து வாங்கிக் கொண்டாலும் திருட்டுப் போகும் என்கிறதா? திரைக்கதையில் விளக்கமில்லை.

“கோப்பை”என்பதும் கனேடியத் தயாரிப்பு. குமார் மூர்த்தியின் மூலக்கதை. உணவகத்தில் கோப்பை கழுவுவதை மிக நீண்டநேரங் காட்டி, அலுக்க வைத்திருந்தது படத் தொகுப்பு. ஊரில் இருக்கிற எல்லாருடைய கோப்பைகளையுங் கழுவத் தயார் என்றவர் தான் சாப்பிட்ட கோப்பையைக் கழுவாது மனைவியே கழுவிக் கொள்ளட்டுமென்று வைப்பதே கதை. நாயகன் சாப்பிடுட்டு விட்டு பின்னனிப் பாட்டில் இலயித்திருக்கும் வேளையைக் காட்டும்போது தெரியும் சாப்பாட்டுத் தட்டில்; வெவ்வேறுஅளவில் சாப்பாடு இருக்க வெவ்வேறு கோணங்களில் காட்டப்படுவது நாங்கள் இப்பிழைகளையெல்லாங் கண்டுகொள்ள மாட்டோம், ஏமாற்றி விடலாம் என்ற தைரியத்தில் காட்டப்பட்டிருக்கிறதா? இக்காட்சிகூட நீண்டுவிட்டது. ஆனால் இதக்குத்தான் மக்களின் தெரிவு என்ற விருது கிடைத்திருக்கிறது.--இதுபற்றி அங்கு வந்திருந்த சிலருடன் கதைத்த போது அதற்கா கிடைத்தது என ஆச்சியப்பட்டார்கள். எங்கோ ஏதோ தவறு இருந்திருக்கிறது போல் விளங்குகிறது.

“காசு மரம்” கனேடியப்படம். காசு என்றால் என்னவென்றும் அதன் பெறுமதி என்னவென்றும் தெரிந்துகொள்ளமுடியாத சிறுமியின் பார்வையில் தகப்பன் பட்டகடன் எத்தகைய நினைப்பை கேள்விகளை பங்களிப்பை ஏற்படுத்தும் எனக் காட்டமுற்பட்ட கதை. சிறுமியின் நடிப்பும் அவர் வயதுக்கு ஏற்ப கையாளப்பட்ட வசனமும் மிக நேர்த்தியானவை. கதையில் வலுவிருந்த அளவில் காட்சி அமைப்பிலோ திரைக் கதையிலோ வலுவில்லை. படப்பிடிப்பு தாறுமாறாக அமைந்திருந்தது. அவசரத்தில் தொகுக்கப்பட்டதுபோல் படத்தொகுப்பிருந்தது. இது ஒரு உணர்ச்சிபூர்வமான கதையென்பதால் சிறுமியை மட்டுமே உணர்ச்சிபூர்வமாகக் காட்டியது நெறியாளரின் முத்திரை. இருந்தும் அம்மம்மா சொல்லுங் கதையில் சீரில்லை. அவர் சொன்ன கதைகள் முன்னுக்குப் பின்னாக மாறி மாறி தேவைக்கு ஒவ்வாமல் சேர்க்கப்பட்டிருந்தது. கடன்கொடுத்த மாமாவின் குரலில் எதார்த்தமில்லை. முடிவு எந்தத்தாக்கத்தையும் ஏற்படுத்தத் தவறிவிட்டது.--இருந்தும் இதற்குத்தான் வடஅமெரிக்காவுக்கான சிறந்த குறும்பட (Exile)விருது கொடுக்கப்பட்டிருந்தது.(?)

இவ்விழா சந்தித்த சில சிந்திக்க வைக்கும் விசயங்கள்: விருதுத் தெரிவுகள் பல வாதப் பிரதிவதங்களை ஏற்படுத்தியிருந்தது. எது எப்பிடியிருந்தாலும் நீதிபதிகளின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதே இங்கிதம். மனிதத் தவறுகள் எங்குமுண்டெல்லோ. நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் P. விக்னேஸ்வரன், அஜித் ஜினசதாசா ஆகியோர் மட்டுமே இத் துறைசார்ந்த ஓரளவு ஆற்றலைக் கொண்டவர்கள். மற்ற நால்வரும் இத்துறைசார்ந்த தொழில் நுட்பங்கள் தெரிந்தவர்களோ, அனுபவங்களுள்ளவர்களோ அல்லர். இரசனையை மடடும்வைத்து இவர்கள் சிறந்தபடங்களை தெரிவுசெய்வதில் உதவியிருக்கலாம் படப்பிடிப்பு, படத்தொகுப்பு, நெறியாள்கை, திரைக்கதை என்கின்ற நுட்பமான விடயங்களைத் தரம்பிரிப்பதில் எப்படி உதவியிருக்கலாம் என்கின்ற கேள்வி இயல்பே! அஜித் தமிழ்மொழி தெரியாதவர். அவர் பெருமளவில் உதவியிருக்கமுடியாது. ஆக விக்கினேஸ்வரனின் தனித்த ஆளுமையில்தானா தெரிவுகள் நடந்திருக்கிறது? அல்லது ஏனோதானோவென்றா தெரிவு நடந்திருக்கிறது? இதனைச் சந்தேகிக்கும் வகையில் எழுப்பப்பட்ட தர்க்கங்களுக்கு நியாயம் கூறமுடியாதுள்ளது. ஒருவர் கேட்டார், இக்குறும்பட விழாவின் சிறந்தபடமாக வேலுதாஸின் “கனவு” தெரிவாகியது இதுவொரு இந்தியப்படம். இந்துசமுத்திரப் பிராந்தியத்து சிறந்தபடமாக S.மோகனின் “ஈசல்” தெரிவாகியிருக்கிறது. இரண்டுமே இந்துசமுத்திரப் பிராந்தியப் படமாகவிருந்தும் எல்லாப் படங்களிலுமே சிறந்ததாக தெரிவான “கனவு” இந்துசமுத்திரப் பிராந்திய சிறந்த படமாகவே இருக்காது போனது எங்கோ ஏதொ நேர்ந்த தவறைத்தானே காட்டுகிறது!—என்ன பதிலைச் சொல்ல? நீதியில் வழு விழுந்தது என்பது மடடும் புரிகிறது. இங்கு நடந்தேறிய இன்னொரு விழாவில் “துரோகம்” படத்துக்கு பல விடயங்களுக்கு விருது வழங்கப்பட்டிருந்தது. அப்படியிருக்க தான் அவ்இயக்குனருக்கு ஏதும் விருது வழங்காவிட்டால் தன்னைநோக்கி கேள்விகள் சந்தேகங்கள் வரலாம் என்ற பயத்துடனா நீதிபதி நடந்திருக்கிறார்?--- இதற்கும் என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

நீதிபதிகளின் தெரிவு தேவைகருதி ஏன் செய்யப்படவில்லையெனக் கேட்டதற்கு அமைப்பாளர் நடைமுறைச் சிக்கல்களைச் சொன்னார். தாம் அனுகிய பலரும் நீண்டநேர நிகழ்வைக் கருதி கலந்துகொள்ள மறுத்துவிட்டதாயும் இருந்தும் தங்களைப்பொறுத்தவரை நீதிபதிகள் தெரிவு சரியானதுதானென்றும் கூறினார். ஆற்றலுள்ளவர்களே,சமூகக் கடமையையும் செய்யுங்களேன்!

இங்கு பங்குபற்றிய படங்கள் அனைத்தும் தழிழ்ப்படங்களல்ல. ஆனால் தமிழர்களின் முயற்சி. ஆதலால் “தமிழ் குறுந்திரைப்படவிழா” என்பதிலும் “தமிழர் குறுந்திரைப்பட விழா” என்பதே சாலச் சிறந்ததாக இருக்கும். கனடாவில் தயாரான படங்களில் ரஞ்சித் ஜோசேப்பால் நான்கு படங்களும் சுமதி ரூபன் என்பவர் இரண்டு, அவர் சம்மந்தப்பட்ட இன்னொன்றுமாக மூன்று படங்கள் ; ஆக இவ்விரு நபர்களுக்கிடையேதான் போட்டியும் இவர்களுக்காகவே விழாவும் நடத்தப்பட்டதென்ற கணிப்பு ஏற்பட்டதையுந் தவிர்த்திருக்கலாம். மூன்று நான்கு கொடுத்தால் ஏதாவதொன்றுக்கெனினும் ஏதும் பரிசு கிடைக்காதா என்ற நோக்கில், பரிசு பெறுவதிலேயே முனைந்து காரியமாற்றி தம் திறமைகளைக் காட்ட முனையாது இருந்ததுபோன்ற பிரமையை இது ஏற்படுத்திவிடும். ஒருவருக்கு ஒரு படமென்று மட்டுப்படுத்தி திறமானதை காட்சிப்படுத்துவதே உசிதமானது. விருது என்றாலே ஏதொ கொடுத்து வாங்குவதுபோல் ஆகிவிட்ட இந்தக்காலத்தில் விருது கொடுப்பதையே தவிர்ப்பதால்; வாதப் பிரதி வாதங்களை தவிர்த்துக்கொள்ளலாம். விருது கொடாமை, நல்நோக்குடன் இத்தகைய விழாவினை ஒழுங்குபடுத்துவோர்மீது எய்யும் புகார் சகியாது மனம்நொந்து விழா ஒழுங்குசெய்வதையே கைவிடும்படி நேர்வதைத் தவிர்க்கும். விருதல்ல முக்கியம். இந்தக் களத்தைச் சரியாகப் பயண்படுத்திக்கொள்வதே!

இவ்விழாவின் சிறந்த குறும் படம்: கனவு (வேலுதாஸ்--இந்தியா)
சிறந்த அமெரிக்கக் கண்டப் படம்: காசு மரம் (ரஞ்சித் யோசேப்--கனடா)
பார்வையாளர் தெரிவில் உயர்ந்தது: கோப்பை (வரன்-- கனடா)
இந்தியப் பிராந்திய சிறந்த படம்: ஈசல் (மோகன்-- இந்தியா)
சிறந்த ஒளிப்பதிவு: உஸ் படத்தில் ரூபன்
சிறந்த படத் தொகுப்பு: துரோகம் படத்தில் ஜேசன்
சிறந்த நெறியாள்கை: It's All About படத்தில் ரஞ்சித் ஜோசேப்
சிறந்த திரைக்கதையாக்கம்: வாழ்வு எனும் வட்டம் படத்தில் K.S..பாலச்சந்திரன்

Home | About Us | Festivals | Press | Links | Articles | Movies | Contact Us

Independent Art Film Society of Toronto
4 Castlemore Avenue, Markham, ON, L6C 2B3